பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டையும் புரளியையும் கிளப்பி வரும் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ., அவர்கள் தலைமையில், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு புதுச்சேரி மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்க முயற்சி செய்வதாக பொய்யான பிரச்சாரத்தை மக்களிடத்திலே கூறி வருகிறார். மக்களிடத்திலே ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை பா.ஜ.க -வின் மீதும் மத்திய அரசு மீதும் கூறிவருகிறார் . இதுபோன்ற முதலமைச்சர் அவர்களின் செயல்களை அவர்களின் கூட்டணி கட்சியான தி.மு.க வும் ஆதரித்து வருகிறது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி என்றைக்கும் முட்டுக்கட்டையாக இருந்தது இல்லை. மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி காலங்களில்தான் சதீஸ்கர், உத்ரகாண்ட், ஜார்கண்ட், தெலுங்கானா போன்ற மாநிலங்களும் லடாக் போன்ற யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டு பிராந்திய வளர்ச்சிக்கு வித்திட்டது.
நமது புதுச்சேரி மாநிலம் தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம். முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் நமது புதுச்சேரி மாநிலத்தின் தனித்தன்மை சிதைத்தவர் என்பதும், மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரியை மாநிலமாக இல்லாமலும் யூனியன் பிரதேசமாக இல்லாமலும் இரண்டும் கெட்டான் நிலைக்கு தள்ளி இன்றைய நிதி சுமைக்கு வித்திட்டவர் இவர்தான் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும். இவருடைய திறமையற்ற நிர்வாகத்தினால் இன்றைக்கு புதுச்சேரி மாநிலம் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகிறது. இதனை மறைப்பதற்காக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதும் துணை நிலை ஆளுநர் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருவது இவருடைய வாடிக்கையாகிவிட்டது . அதுபோல தற்போது புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு தமிழகத்தோடு இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசின் திட்டத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களை டெல்லில் நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது, மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், பா.ஜ.க பிரமுகர் சிவசங்கரன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அவர்களும் கூறியுள்ளார்கள். மாநிலங்களின் வளர்ச்சியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.கவிற்கு வேண்டுமானால் அக்கறை இல்லாமல் இருக்கலாம். ஆனால், மாநிலங்களின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த மற்றும் ஒன்றுபட்ட இந்தியத் திருநாட்டின் வளர்ச்சி என்பது பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமும் செயல்பாடும் ஆகும் . புதுச்சேரி மாநில மக்களின் எண்ணங்களுக்கு மாறாக என்றைக்கும் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்