புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
புதுச்சேரி அரசு கல்வித் துறையில் 10 ஆண்டு காலமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குறிப்பாக தமிழ் மொழி பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணி ஆணை இன்று வரை வழங்கப்படாமல் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை இருக்கின்ற இந்த சூழ்நிலையில் தமிழ் மொழி ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசு இன்று வரை வெளியிடவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணத்தைக் காட்டி தமிழ் மொழி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நம் தாய்மொழி தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டவர்கள் போல் காட்டிக் கொண்டு வரும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு தமிழ்மொழி ஆசிரியர்கள் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
10 ஆண்டுகளாக தமிழ் மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதற்கும் தமிழ் மொழி அறிவை வளர்த்துக் கொள்ள சாத்தியக்கூறுகளே இல்லாமல், தமிழ் மொழிக் கல்வியில் பின்னோக்கி உள்ளனர். எதற்கெடுத்தாலும் யாரையாவது காரணம் காட்டி நிர்வாகத் திறமை இல்லாமல் மெத்தனப் போக்கில் ஆட்சி செய்துவரும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்பாமல் கல்வியின் தரத்தை பாழாக்கிக் கொண்டு வருகின்றனர்.
இதேபோல், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மழலையர் கல்வி கற்பிப்பதற்கு தகுந்த ஆசிரியர்களான பால சேவிகா காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளி கல்வித்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியர்களாக பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
அந்த காலியான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பதவிகளை புதுச்சேரி அரசின் கல்வித்துறை இதுவரை நிரப்பப்படாமல் மாணவர்களுக்கு முழுமையான ஆரம்பக் கல்வி கிடைப்பதில்லை. இதுபோல் தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பபடாமல் இருந்தால் மாணவர்களின் எதிர்காலம், கல்வியின் தரம் அனைத்தும் புதுச்சேரி மாநிலத்தில் பாழாகிவிடும் என கூறியுள்ளார்.