புதுசசேரியில் நிலவி வரும் நிதி நெருக்கடியால் அரசு திட்டங்கள் முடங்கும் அபாயம்

புதுசசேரியில் நிலவி வரும் நிதி நெருக்கடியால் அரசு திட்டங்கள் முடங்கும் அபாயம்

0
164
====================ADVERTISEMENT====================

கொரோனாவிற்காக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்

நாடு முழுவதும் மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் ஆகியவை இயங்காமல் முடங்கியது. இதனால் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது.

புதுவை அரசு ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கால் அரசுக்கு வர வேண்டிய வருமானம் வரவில்லை. புதுவை அரசை பொறுத்தவரை கலால்துறை, வணிக வரி, பத்திரப்பதிவு, போக்குவரத்து ஆகியவற்றின் மூலமாகத்தான் அதிகளவு வரி கிடைக்கும். ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி இத்துறைகளின் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

Advertisement

ஆனால் ஊரடங்கால் இவை அனைத்தும் முடங்கியதால் வருவாய் கிடைக்கவில்லை. இதோடு உள்ளாட்சி துறை மூலமாக வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவற்றையும் முழுமையாக வசூலிக்க முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் வழக்கமாக மார்ச் மாதம் புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 30-ந்தேதி அரசின் 3 மாத செலவினங்களுக்காக ரூ.2 ஆயிரத்து 42 கோடி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு 2020-21ம் ஆண்டிற்கு பட்ஜெட்டிற்கு ரூ.ஆயிரத்து 702 கோடி நிதியை வழங்குகிறது. இந்த நிதியும் 3 மாதத்திற்கு ஒரு முறையாக பிரித்து அளிக்கப்படும்.
இதில் முதல்கட்ட தவணை கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. 2-ம் கட்ட தவணை தொகை ஜூன் மாத இறுதியில்தான் வழங்கப்படும். முதல்கட்டமாக வழங்கிய நிதியில் புதுவை அரசு ஏப்ரல் மாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்‌ஷன், கொரோனா தடுப்பு பணிகளுக்கு செலவிட்டுள்ளது. மாதத்திற்கு அரசு ஊழியர்களுக்கு ரூ.160 கோடி சம்பளமும், ரூ.80 கோடி ஓய்வூதிய பென்‌ஷனும் என ரூ.240 கோடி அரசுக்கு தேவைப்படுகிறது. இதனால் அடுத்த மாதத்திற்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதவிர நடைமுறையில் உள்ள அரசின் திட்டங்கள், அரசு செலவினத்திற்கும் நிதி தேவைப்படுகிறது. முழுமையான பட்ஜெட் போடப்பட்டால் நிதி கிடைக்க வழி ஏற்படும்.

ஆனால் இதுவரை மாநில திட்டக்குழுவே கூட்டப்படவில்லை. இனி திட்டக்குழு கூடினாலும் அடுத்த மாதத்தில்தான் பட்ஜெட் போடும் நிலை உருவாகும். மேலும் வெளிக்கடன் பெறும் வரம்பையும் புதுவை அரசு தாண்டிவிட்டது. இதனால் வெளிக்கடன் வாங்குவதிலும் சிக்கல் உள்ளது. இதற்கிடையே நடப்பாண்டில் பிணைய பத்திரம் மூலம் பெற்ற ரூ.1100 கோடியை வட்டியுடன் ரூ.1600 கோடியாக புதுவை அரசு திரும்ப செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது.

இதனால் புதுவை அரசு மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளது. கொரோனாவுக்காக அரசு அதிக அளவில் நிதி செலவிட்டுள்ளது. இதனாலும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு உதவும் என்று எதிர்பார்த்தனர். மத்திய அரசிடம் இருந்தும் எந்த உதவியும் வரவில்லை.

இருப்பினும் கொரோனாவிற்காக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

ஆனாலும் இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் கிடைக்கவில்லை. இதனால் அரசு திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here