கொரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்காத நாடுகள் எவை, என்ன காரணம்?

0
229
====================ADVERTISEMENT====================

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து ஆட்டிப் படைத்து வருகிறது.

உலகம் முழுவதும் 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11.3 லட்சம் மக்களிடையே கரோனா தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2,36,000 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, விலை மதிப்பில்லாத உயிர்கள்.

வல்லரசு நாடுகள், பலம் பொருந்திய பிரதேசங்கள், எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகள் என மார்தட்டிக் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கரோனாவின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னாமாகி வருகின்றன.

Advertisement

இந்நிலையில் கொரோனா வைரஸால் இதுவரை சில நாடுகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் முதல் ஆய்வுப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ், 1876-ல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பல்கலைக்கழகம் வெளியிடும் அறிவிப்புகளே அமெரிக்காவின் அதிகாரபூர்வ அறிவிப்புகளாகக் கருதப்படுகின்றன.

வடகொரியா
இதன் ஆய்வு முடிவுகளின்படி, வடகொரியாவில் இதுவரை கரோனா தொற்று ஏற்படவில்லை. அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து விலகல் போக்கைக் கடைப்பிடிப்பது இதற்கான முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அண்டை நாடான சீனாவில் தொற்று உறுதியானதும் கடந்த ஜனவரி மாதத்திலேயே தனது எல்லைகளை வடகொரியா மூடியது. கடல் மற்றும் வான்வழி எல்லைகளும் மூடப்படன. இதனாலும் வடகொரியாவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், கரோனா பாதிப்பு விவரங்களை மூடி மறைக்கிறார் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

ஏமன்
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஏமன், போர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு. தொடர்ச்சியான போர் சூழல், இங்குள்ள பொருளாதாரத்தையே சிதைத்துள்ளது. அழிக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகள், நிரம்பி வழியும் அகதி முகாம்கள், 5 ஆண்டுகளுக்கும் மேலான போர் ஆகியவற்றால் ஏமன் எல்லா விவகாரங்களிலும் அபாயச் சூழலிலேயே இருக்கிறது.

எனினும் அங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது நிம்மதியை அளிக்கும் தகவலாக இருக்கிறது. கரோனா முன்னெச்சரிக்கையாக ஏமனின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.

தீவு நாடுகள்
மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தான் (Turkmenistan), சிறிய பசிஃபிக் தீவு நாடுகளான சாலமன் தீவுகள் மற்றும் வனுவாடு ஆகிய பகுதிகளிலும் கரோனா தொற்று இதுவரை ஏற்படவில்லை.

ஆப்பிரிக்க நாடுகள்
ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளில் ஒன்றான காமரோஸ்-ல் (The Comoros) கரோனா உறுதி செய்யப்படவில்லை. கூட்டமான எரிமலைத் தீவுகள் இந்த நாட்டில் அடக்கம்.

சா டோம் பிரின்சிபி (Sao Tome and Principe) ஆப்பிரிக்கத் தீவு நாடுகளில் ஒன்று. காபிகளுக்குப் பெயர்போன இந்த நாட்டில், கரோனா நோய் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானிலும் கொரோனா இல்லை. தென் ஆப்பிரிக்க நாடான லெசொதோவிலும் (Lesotho) பாதிப்பு இல்லை என்றே ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மோசமான சுகாதாரம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, சுகாதார விழிப்புணர்வின்மை, போதிய அளவில் இல்லாத கட்டமைப்பு வசதிகள் ஆகியவை ஆப்பிரிக்க நாடுகளின் தலையாயப் பிரச்சினைகள்.

எனினும், இவையே கரோனா பரவல் தொற்றைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா பரவலுக்கான அதி முக்கியக் காரணம் விமானப் பயணம், வெளிநாடுகளில் இருந்து அதன் வழியாகப் பயணித்த பயணிகள். அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டாதது முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கண்டறியக்கூட உரிய, நவீன உபகரணங்கள் போதிய அளவில் இல்லை என்பதும் கரோனா தொற்று எண்ணிக்கையில் ஆப்பிரிக்க நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here