தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் – சிவா எம்எல்ஏ வேண்டுகோள்

0
53

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி மாநிலத்தின் அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாக அரசு உதவியுடன் செயல்பட்டு வருகின்றது. தற்போது 20–க்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சம்பளம் போடவில்லை. கடுமையாக உழைத்து வரும் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாததால் மிகுந்த மனஉளச்சளுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடும்பம் நடத்துவதற்கும், பிள்ளைகளின் கல்விச் செலவை சமாளிக்க முடியாமலும் அல்லல்படும் ஊழியர்கள் குறித்து மாநில அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். நிதியில்லை, நஷ்டம் என்று கூறி்க்கொண்டு ஊழியர்களை பட்டினிப் போடுவதால் இந்த அரசு மீது அவர்களின் கோபம் அதிகரித்து வருகின்றது.

இந்த ஊழியர்களை கொள்ளைப்புறமாக பல லட்சம் கையூட்டு பெற்றுக்கொண்டு வேலைக்கு வைத்துவிட்டு சென்றவர்கள் எல்லாம் அரசியலில் இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். நிறுவனங்களில் தேவைக்கு அதிகமாக ஆட்களை வைத்தது, தேவையற்ற செலவினம், ஊழல் காரணமாக நிறுவனம் நலிவடைந்துள்ள நிலையில் ஊழியர்களை பட்டினிப்போட்டு வேடிக்கை பார்க்கும் அரசின் செயலை அனுமதிக்க முடியாது. நிறுவனங்கள் செயல்பாட்டை ஆய்வு செய்கின்றோம், சீரமைப்போம் என்று வெற்று அறிக்கையின் மூலம் ஊழியர்களின் குடும்ப வறுமையை போக்கிட முடியாது. அதேபோல், மாநில துணை நிலை ஆளுநரை காரணம் காட்டிக் கொண்டு இனியும் காலம் கடத்துவதை ஏற்க முடியாது.

எனவே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேலையில் ஊழியர்களின் சம்பள பாக்கியை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஒன்றுதிரட்டி, அரசை முடிக்கிப் போடுகின்ற துணைநிலை ஆளுநர் மாளிகையை நோக்கி மிகப்பெரிய போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் என்று எச்சரிக்கிறோம் என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here