தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு கவிழ்வதை பா.ஜனதா விரும்பவில்லை: திருமாவளவன்

0
27
தற்போதுள்ள சூழலில் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு கவிழ்வதை பா.ஜனதா விரும்பவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

கவர்னர் தற்போது உள்ள சூழலில் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆணையிட மாட்டார் என்று தெரிகிறது. ஏனென்றால் எங்களிடத்தில் அவர் பேசும் போது, தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். எனவே அவர்களையும் சேர்த்து அ.தி.மு.க.வின் பலம் பெரும்பான்மையாக தான் உள்ளது.

எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் தான் தலையிடுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறினார். இருந்தாலும் நாங்கள், நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும், தமிழக அரசியலில் ஒரு குழப்பமான நிலை உள்ளது, எனவே சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆணையிடுங்கள் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

கவர்னர் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த பிரச்சினையில் தலையிட முடியாது என்றும் சட்டம் அதற்கு இடம் தரவில்லை என்று மீண்டும் கூறினார். அதற்கு அவர் சொல்லும் காரணம், 19 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வினர்தான்.

சட்டப்படி அவர்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருப்பதால் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை இழந்து விட்டார் என்று நான் எடுத்துக் கொள்ள முடியாது. அந்த 19 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு நீக்கப்பட்டாலோ அல்லது வேறு கட்சியில் இணைந்தால் அது சட்ட சிக்கலாகும்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இரு குழுக்களாக பிரிந்து சண்டை போடுகிறார்கள். எனவே அதில் நான் தலையிட இயலாது என்றார்.

என்றாலும் தாங்கள் இதில் தலையிட முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளோம். 19 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து வந்து உங்களை சந்தித்து முதல்-அமைச்சருக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்று கொள்கிறோம் என்று கடிதம் கொடுத்துள்ளனர்.

எனவே இதில் தலையிட உங்களுக்கு அதிகாரம் உள்ளது. சட்டசபையை கூட்டி முதல்-அமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.

இதன் பின்னரும் கவர்னர் பேரவையை கூட்டவில்லை என்றால் எதிர்கட்சிகள் கூடி பேசி என்ன செய்வது என்று விரைவில் முடிவு எடுப்போம்.

அடுத்து தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர். கவர்னர் இப்படி முடிவு எடுக்காமல் தயக்கம் காட்டுவதற்கு மத்திய அரசு தலையீடுதான் காரணமாகும்.
ஏனென்றால் தற்போதுள்ள சூழலில் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு கவிழ்வதை பா.ஜனதா விரும்பவில்லை. அ.தி.மு.க. அரசு கவிழ்ந்தால் உடனடியாக தேர்தல் வந்தால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும் என்பதால் பா.ஜனதா விரும்பவில்லை. அதை கவர்னர் எதிரொலிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here